பொது இடங்களில் விளம்பர தட்டிகள், பேனர்கள் வைத்தால் சிறை தண்டனை கலெக்டர் எச்சரிக்கை

பொது இடங்களில் விளம்பர தட்டிகள், பேனர்கள் வைத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-09-10 23:00 GMT
உத்தமபாளையம்,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொது இடங்களில் விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்கள் அமைப்பது தொடர்பாக வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, போலீஸ் துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், அச்சக உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், விழாக்கள் நடத்துபவர்கள் விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்களை பொது இடங்களான சாலையின் இருபுறங்கள், நடை மேடைகள், நடை பாதைகளில் நிறுவுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்களை நிறுவுவதால் சாலையினை பயன்படுத்துவோர்கள், இரு சக்கர வாகனங்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் பயணிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதுடன் விபத்திற்கு வழிவகை செய்கிறது.

எனவே, சென்னை ஐகோர்ட்டு உத்தரவை, மாவட்டத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோர்ட்டு இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த உத்தரவு செல்லும் என்பதால் விளம்பர தட்டிகள் மற்றும் பேனர்களை பொது இடங்களில் வைக்க வேண்டாம்.

ஐகோர்ட்டு உத்தரவை மீறி, விளம்பர தட்டிகளை வைத்தால் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி 1 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக அளித்திட கோர்ட்டு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, அச்சக உரிமையாளர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் தயார் செய்வோர் சட்ட விதிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஆர்.டி. ஓ.க்கள் ஜெயப்பிரிதா, சாந்தி மற்றும் தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், அச்சக உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்