பகல் நேரத்தில் பள்ளம் தோண்டும் பணியால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் ஈரோடு

பகல் நேரத்தில் பள்ளம் தோண்டும் பணியால் ஈரோடு போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கிறது.

Update: 2019-09-11 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், மின்சார கேபிள் புதைக்கும் பணிகள், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஒருபுறம் இந்த பணிகளுக்காக பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது. இன்னொரு புறம் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளன. மற்றொரு பக்கம் சாலைகள் புதிதாக போடுவதற்காக தோண்டப்பட்டு உள்ளன. இவ்வாறு மாநகர் பகுதியில் 50 சதவீதத்துக்கும் மேல் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாதபடி துண்டிக்கப்பட்டு இருக்கின்றன. மீதம் இருக்கும் சாலைகளில்தான் வாகனங்கள் செல்லவேண்டும்.

ஆனால் துண்டிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிடுவதை விட்டு, நன்றாக இருக்கும் ரோடுகளில் புதிதாக பள்ளங்கள் தோண்டும் பணி நடந்து வருகிறது. மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு என்று முக்கிய ரோடுகளிலும் பணிகள் முடிவு இல்லாமல் நடந்து கொண்டு இருக்கிறது.

பணியின் காரணமாக சாலைகள் குறுகலாக மாறிவிட்டன. முக்கிய சாலைகள் மட்டுமின்றி, குறுகலான ரோடுகளிலும் குழிகள் தோண்டும் பணி நடந்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்று ஈரோடு நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன நெரிசல் இருந்தது.

இதுபற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ‘ஈரோட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இது மகிழ்ச்சிக்கு உரியது. ஆனால், இந்த பணிகளால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படுகிறது. வாகனங்களை ஓரத்தில் நிறுத்தக்கூட இடவசதி இல்லை. இதனால் ஆம்புலன்சு வாகனங்கள் செல்லவே சிரமமாக இருக்கிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம், பகல் நேரத்தில் நடைபெறும் பணிகள்தான். சாக்கடை கட்டும் பணி, மின்கம்பி பதிக்கும் பணி என்று பல்வேறு பணிகளும் பகல் நேரத்தில் நடக்கிறது. இதற்கான எந்திரங்கள், தளவாடங்கள் ரோட்டை அடைப்பதாலும் பிரச்சினை வருகிறது. எனவே ஒவ்வொரு சாலையாக, முடிந்தவரை இரவு நேரங்களில் பணிகளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்