மணப்பாறையில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

மணப்பாறையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Update: 2019-09-11 23:00 GMT
மணப்பாறை,

மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை காலம் முடிந்தும் கூட வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மணப்பாறை பகுதியில் நேற்று மாலை வானத்தில் கருமேகங்கள் திரண்டன. சிறிது நேரத்தில் தூறலுடன் மழை பெய்யத்தொடங்கி, பின்னர் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.

இந்த மழையால், மணப்பாறையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்தபடி சென்றன. பஸ் நிலையம் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால், பயணிகள் அவதிப்பட்டனர். ஒருசில இடங்களில் மழைநீருடன், கழிவுநீர் கலந்து ஓடியதால் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால், கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் திருச்சியில் நேற்று மதியம் கடுமையான வெயில் அடித்தது. மாலையில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். திருச்சி ஜங்ஷன், மத்திய பஸ் நிலையம், பாலக்கரை, சத்திரம், தில்லைநகர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மழையால் சாலையோர காய்கறி கடை வியாபாரிகள் மற்றும் காந்திமார்க்கெட் வியாபாரிகள் அவதிக்கு உள்ளானார்கள். தொடர்ந்து இரவு வரை மழை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது.

மேலும் செய்திகள்