கயத்தாறில், புதிய தாலுகா அலுவலகம் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

கயத்தாறில் புதிய தாலுகா அலுவலகம் ஓரிரு மாதங்களில் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2019-09-11 22:45 GMT
கயத்தாறு,

கயத்தாறை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து கயத்தாறு யூனியன் அலுவலக வளாகத்தில் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. தொடர்ந்து கயத்தாறு புதிய பஸ் நிலையம் அருகில் ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் புதிய தாலுகா அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் நேற்று காலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், கயத்தாறில் புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்று திறப்பு விழா நடைபெறும் என்று தெரிவித்தார். கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, நகர செயலாளர் கப்பல் ராமசாமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

கயத்தாறில் அ.ம.மு.க. மாவட்ட பொருளாளர் சங்கிலி பாண்டியன் தலைமையில் சுமார் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

சின்னப்பன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி, நகர செயலாளர் கப்பல் ராமசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்