மணிமுத்தாறு ஊருக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு - பொதுமக்கள் அச்சம்

மணிமுத்தாறு ஊருக்குள் கரடி புகுந்ததால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2019-09-11 23:00 GMT
அம்பை,

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, ஏர்மாள்புரம் உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் கரடி, சிறுத்தைப்புலி, காட்டுப்பன்றிகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்தும், விளைநிலங்களுக்குள் புகுந்தும் அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுத்தைப்புலி ஒன்று ஊருக்குள் புகுந்து ஆட்டை அடித்துக் கொன்றது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறை சார்பில் 2 இடங்களில் கூண்டு வைத்தும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மணிமுத்தாறு ஊருக்குள் கரடி புகுந்தது. அங்குள்ள புறக்காவல் நிலையம் எதிரே சாலையில் அங்கும் இங்கும் ஓடியவாறு சாலையோர மரத்தில் ஏறிக் கொண்டது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அம்பை வனச்சரகர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மணிமுத்தாறு ஊருக்குள் புகுந்த கரடியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்