குறுக்குத்துறை முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-09-12 21:00 GMT
நெல்லை, 

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குறுக்குத்துறை முருகன் கோவில்

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா சிறப்பா கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுப்பிரமணியர், வள்ளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வருகிறது.

காலையில் சுவாமி பூங்கோயில் வாகனத்திலும், இரவில் மயில் வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். கடந்த 9-ந் தேதி காலையில் ஆறுமுகருக்கு உருகு சட்ட சேவை நடந்தது. இரவில் வெற்றிவேர் சப்பரத்தில் ஆறுமுகர் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு நீராட்டு நடந்தது.

தொடர்ந்து சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி நெல்லை மாநகருக்குள் எழுந்தருளினார். கடந்த 10-ந் தேதி காலை வெள்ளை சாத்தி நான்முகனுக்கு காட்சி அளிக்கும் வைபவ நிகழ்ச்சி நடந்தது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 7.30 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தேர் நான்கு ரத வீதிகளையும் சுற்றி நிலையை அடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சுப்பிரமணியர் தெப்ப மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் தெப்பத்திருவிழா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்