கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-12 23:00 GMT
திருச்சி,

திருச்சியில் பார்வையற்றோர் நலனுக்காக மத்திய பஸ் நிலையம் அருகே தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட்டது. இங்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்தநிலையில் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை.

மேலும், சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்த பி.எப்., இ.எஸ்.ஐ. போன்ற தொகைகளும் தொழிலாளர்களின் கணக்கில் செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் உபயோகிப்பாளர் உரிமை இயக்க மாநில பொதுச்செயலாளர் மகேஸ்வரி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனு குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை மகேஸ்வரி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து தங்கள் கோரிக்கை மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினர். அதன்பிறகு அவர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்