வேலூர் மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணி ; பொதுமக்கள் ஒத்துழைக்க கலெக்டர் வேண்டுகோள்

வேலூர் மாவட்டத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாகவும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2019-09-12 23:15 GMT
வேலூர்,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொருளாதார கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு திட்டம் கடந்த 1976-ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது 7-வது பொருளாதார கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இந்த மாதம் (செப்டம்பர்) முதல் நவம்பர் மாதம் வரை கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணி பொதுசேவை மையம் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணியில் 3 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். ஒரு மாநகராட்சி, 11 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றியங்கள் என மாவட்டம் முழுவதும் இந்த கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

கணக்கெடுப்பு பணியாளர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள செல்போன் செயலி மூலம் வேளாண்மை சாராத பொருளாதார நடவடிக்கை குறித்த விவரங்களை பதிவுசெய்ய உள்ளனர்.

இதில் நிறுவனங்களின் உற்பத்தி, பகிர்வு மற்றும் சேவை விவரங்கள், ஆண்டு வர்த்தகம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன் விவரம், வேலைவாய்ப்பு விவரங்கள் போன்றவை பதிவுசெய்யப்படும். மாத சம்பளம் பெறுவோர், வீட்டு வேலை செய்வோர், மாத ஓய்வூதியம் பெறுவோர், வாடகை பெறுவோர் ஆகியோரிடம் இந்த கணக்கெடுப்பு நடைபெறாது.

இந்த கணக்கெடுப்பு தொழில்முனைவோரின் தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. எனவே பொருளாதார கணக்கெடுப்பை சிறப்பாக நடத்தி முடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்