ராயக்கோட்டை அருகே விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சாவு ; பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு

ராயக்கோட்டை அருகே விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.

Update: 2019-09-12 22:45 GMT
ராயக்கோட்டை,

ராயக்கோட்டை அருகே உள்ள வரகானபள்ளியை சேர்ந்தவர் சின்ன லட்சுமணன் (வயது 48). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி முனிரத்தினா (44). கெலமங்கலம் அருகே உள்ள நெருப்புகுட்டையை சேர்ந்த தனபால் என்பவருடைய மகன் தமிழரசு (19). இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அதே நெருப்பு குட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் சதீஷ் (17). இவரும் பாலக்கோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த 9-ந் தேதி தேன்கனிக்கோட்டையில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சின்ன லட்சுமணனும், முனிரத்தினாவும் மொபட்டில் சென்றனர். அதே போல தமிழரசும், சதீசும் மோட்டார்சைக்கிளில் வந்தனர். வரகானப்பள்ளியில் வந்த போது அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதியது. இதில் சின்ன லட்சுமணன், தமிழரசு ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

மேலும், முனிரத்தினாவும், சதீசும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த முனிரத்தினா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரஜினி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்