முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை - பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு

அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கொலை வழக் கில் கைதான 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-09-13 23:30 GMT
பூந்தமல்லி,

சென்னை அம்பத்தூரை அடுத்த மண்ணூர்பேட்டை, மாணிக்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் குரு. அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக குருவை மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், இந்த கொலை தொடர்பாக கொரட்டூரை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 30), மண்ணூர்பேட்டையை சேர்ந்த பிரவீண்குமார் (32), ராஜ்குமார் (29), மற்றொரு பிரவீண்குமார் (29), ஸ்ரீதர் (23) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3-ல் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அம்பிகா சுரேஷ், வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 8 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து 5 பேரையும் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் புழல் சிறைக்கு அழைத்து சென்றார். அரசு தரப்பில் வக்கீல் அந்தமான் முருகன் வாதாடினார்.

மேலும் செய்திகள்