பழனி அருகே, குளத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட மரங்கள் அகற்றம்

பழனி அருகே பாப்பான்குளத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் வேருடன் பிடுங்கி அகற்றப்பட்டன.

Update: 2019-09-13 22:00 GMT
பழனி,

பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்டது பாப்பான்குளம். 175 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளத்தின் மூலம் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் குளத்தில் தண்ணீர் இல்லாத காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதியில் சில விவசாயிகள் ஆக்கிரமித்து பயறு வகைகளை பயிரிட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக சிலர் இந்த நிலத்தை நிரந்தரமாக்கி கொள்ளும் எண்ணத்துடன் கொய்யா, இலவம்பஞ்சு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தனர். இதனால் குளத்தின் பரப்பளவு சுருங்கி காணப்பட்டது.

இந்நிலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாப்பான்குளத்தை தூர்வாரி சீரமைக்க ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டார். அப்போது அவர், குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக குளத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கொய்யா, இலவம் பஞ்சு மரங்கள் ஆகியவற்றை வேருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றின் குழாய்களையும் அகற்றினர். மேலும் அங்கு நில அளவை செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது தற்போது நிலம் அளக்கப்பட்டு அங்கிருந்த ஆக்கிரமிப்பு மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் குளத்தின் எல்லைகள் எளிதில் காணும் வகையில் கற்கள் ஊன்றப்பட்டு, சிறிய கரை போன்று திட்டு அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்