முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி கலெக்டர் ஷில்பா தகவல்

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு நீட்ஸ் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா கூறி உள்ளார்.

Update: 2019-09-13 22:00 GMT
நெல்லை, 

முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு நீட்ஸ் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ஷில்பா கூறி உள்ளார்.

இது குறித்து கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரூ.5 கோடி வரை கடனுதவி

நெல்லை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு நீட்ஸ் திட்டத்தில் புதிய உற்பத்தி, சேவை தொழில் தொடங்க திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிக பட்சம் ரூ.30 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடன் உதவி, வங்கிகள் அல்லது மாநில கடனுதவி நிறுவனம் வழியாக சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது இந்த திட்டத்தில் கீழ் பூமி தோண்டும் எந்திரங்கள், குளிர்பதன வசதியுடைய வாகனம், எல்.பி.ஜி.டேங்கர் ட்ரக், பிளை ஆஷ்டேங்கர் ட்ரக், கன்டெய்னர் ட்ரக், ரோடு ரோலர், சாலை போடும் தார் கலவை பரப்பும் வாகனம், வாடகை டேங்கர் ட்ரக், கிரேன் வாகனங்கள், காங்கீரிட் கலவை எந்திரம், ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனம், ரெடிமிக்ஸ் காங்கீரிட் வாகனம், ரெக்கவரி வாகனம், காங்கீரிட் செலுத்தும் வாகனம், தொழிற்சாலைகளுக்கான அனைத்து கேஸ் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் நடமாடும் உணவு விடுதிகள் நடத்தவும் மானியம் வழங்கப்படுகிறது.

தகுதிகள்

ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மகளிர் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கை தொழில் முனைவோர்் 21 வயதிற்கு மேல் 45 வயதிற்குள்ளும், ஏனைய தொழில் முனைவோர் 35 வயதிற்குட்பட்டவர்களும் இந்த கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி www.msmeonline.tn.gov.in/needs ஆகும். கூடுதல் விவரங்களுக்கு, நெல்லை மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளரை நேரிலோ அல்லது 0462-2572162, 2572384 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்