அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டம் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-09-14 22:15 GMT
சிவகங்கை,

 மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் பிற விழாக்களுக்கு பேனர்கள் வைக்க விரும்பும் ஊராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்திலும், பேரூராட்சி பகுதிகளில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்திலும் மற்றும் நகராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் சம்பந்தபட்ட நகராட்சி அலுவலகத்திலும் உரிய கட்டணம் செலுத்தி ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் 15 தினங்களுக்கு முன்னதாக முன்அனுமதி பெறவேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்கள் சட்டவிரோதமானது. இதற்காக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பேனர்கள் வைக்கப்படும் போது அந்த இடத்தின் உரிமையாளர் மற்றும் போலீஸ்நிலையத்தில் தடையில்லா சான்று பெறுவது அவசியமானதாகும். அனுமதி பெற விண்ணப்பிக்கும் போது சமூகம், மதம், கலாசாரம், அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட எந்த காரணத்திற்காக பேனர்கள் வைக்கப்படுகிறது என்பதை விண்ணப்ப படிவத்தில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

எந்த காரணத்திற்காகவும் போக்குவரத்து வழித்தடங்கள், நெடுஞ்சாலை, சாலைகளில் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக்கூடாது. சட்டத்திற்கு புறம்பாக அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுவதோடு, அதனை வைத்தவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும். அவ்வாறு அனுமதி இன்றி பேனர் வைப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் ஒரு வருட சிறை தண்டனை வழங்க வழிவகை உள்ளது.

எனவே மாவட்டத்தில் விளம்பர பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் வைக்க விரும்புபவர்கள் முன் அனுமதியுடன் அரசின் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி அமைந்திட ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காரைக்குடியில் உள்ள பொது இடங்களில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றும் பணி நடைபெற்றது. இந்த பேனர்கள் அனுமதி பெற்றிருந்தாலும், பெறாமல் இருந்தாலும் அவற்றை அகற்ற காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தரவிட்டார். அதன்பேரில் வடக்கு போலீசார் 100 அடி சாலை, பெரியார் சிலை, செக்காலை வீதி ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினர்.

மேலும் செய்திகள்