தரகம்பட்டி பகுதியில் பலத்த மழை: கடவூர் தாலுகா அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது

தரகம்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்ததால் கடவூர் தாலுகா அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது.;

Update:2019-09-15 04:15 IST
தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவில் தரகம்பட்டி, கடவூர், பாலவிடுதி, மஞ்சாநாயக்கன்பட்டி, பண்ணபட்டி, கொசூர் உட்பட 23 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதி வானம்பார்த்த பூமியாகவே உள்ளது. மழை பெய்தால்தான் விவசாயம் செய்யமுடியும். இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே சரிவர மழை பெய்யாமல் கடுமையான வறட்சி ஏற்பட்டது. தற்போது சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் மானாவாரி பயிர் சாகுபடி செய்ய முடியாமல் போனது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், விவசாயம் இல்லாமல் கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமல் போனது.

பலத்த மழை

கடுமையான வறட்சியில் இருந்த மக்களுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழைபெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால், விவசாய நிலங்கள், வாரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் இந்தபகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் தரகம்பட்டியில் உள்ள கடவூர் தாலுகா அலுவலக வளாகத்தை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மழை காலத்தில் தாலுகா அலுவலக வளாகத்தின் உள்ளே தண்ணீர் தேங்காமல் இருக்க மண்திட்டு அமைக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்