தேனி மாவட்டத்தில் மழை எதிரொலி: 55 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்து வைகை அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-09-16 22:00 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 54 அடியை எட்டியது.

இதனையடுத்து கடந்த மாதம் 29-ந்தேதி முதல் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் பாசனத்திற்கும், மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 60 கனஅடி என மொத்தம் வினாடிக்கு 960 கனஅடி நீர் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டு வருகிறது.

அதே நேரம் அணைக்கு சராசரியாக வினாடிக்கு 1,200 கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் வந்து கொண்டே இருப்பதால், அணை நீர்மட்டம் குறையாமல் உயர்ந்து கொண்டே வருகிறது. போதுமான நீர்வரத்து இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணையின் நீர்மட்டம் 55 அடியாக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 55.36 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,407 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் அணையில் இருந்து வினாடிக்கு 960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 2,778 மில்லியன் கனஅடியாக உள்ளது.

மேலும் செய்திகள்