ஏரல் அருகே சாலையோர பள்ளத்துக்குள் கல்லூரி பஸ் பாய்ந்தது: 45 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்

ஏரல் அருகே சாலையோர பள்ளத்துக்குள் கல்லூரி பஸ் பாய்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 45 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.

Update: 2019-09-17 22:15 GMT
ஏரல், 

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் நேற்று காலையில் வழக்கம்போல் ஏரலில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டது. அந்த பஸ்சில் சுமார் 45 மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர்.

ஏரல் அருகே கொற்கை மணலூர் அருகில் சென்றபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக பஸ்சை சாலையோரமாக டிரைவர் ஒதுக்கினார். அப்போது அந்த பஸ் சாலையோர பள்ளத்துக்குள் கவிழும் நிலை ஏற்பட்டதால், உடனே டிரைவர் பஸ்சை வலதுபுறமாக திருப்பினார். இதனால் அந்த பஸ், சாலையின் வலதுபுற பள்ளத்தில் பாய்ந்து நின்றது.

உடனே பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் அனைவரும் பதறியடித்தவாறு கீழே இறங்கினர். பின்னர் டிராக்டர் மூலம் கயிறு கட்டி, அந்த பஸ்சை சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகில் வலதுபுறம் சுமார் 25 அடி ஆழ பள்ளம் உள்ளது. அதிர்ஷ்டவசமாக பஸ் அந்த பள்ளத்தில் பாயாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஏரல் அருகே உமரிக்காட்டில் இருந்து கொற்கை குளம் வரையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. குறுகலான இந்த சாலையின் இருபுறமும் சரள் மண் முறையாக பரப்பப்படாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே சாலையின் இருபுறமும் சரள் மண்ணை முறையாக பரப்ப வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்