ஒட்டன்சத்திரத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் கைது

ஒட்டன்சத்திரத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-21 22:45 GMT
ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இருளகுடும்பன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 45). விவசாயி. இவர் ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் ரோடு பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இந்த வீட்டுக்கு புதிதாக வரி விதிக்க வேண்டி இருந்தது. எனவே அவர் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் கிருஷ்ணனை(50) அணுகினார்.

அப்போது அவர் வரியை குறைத்து போடுவதாகவும், அதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதற்கு ராமச்சந்திரன் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து ரூ.6 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வரியை குறைத்து போட்டு விடலாம் என கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆனால் ராமச்சந்திரனுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை. எனவே அவர் இதுகுறித்து திண்டுக்கல்லில் உள்ள லஞ்சஒழிப்பு போலீசிடம் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் கிருஷ்ணனை பொறி வைத்து பிடிப்பதற்காக, ராமச்சந்திரனிடம் ரசாயனபவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். இந்தநிலையில் நேற்று ராமச்சந்திரன் ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு டீக்கடைக்கு கிருஷ்ணனை வரவழைத்து அவரிடம் ரசாயனபவுடர் தடவிய ரூ.6 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு ஏற்கனவே திண்டுக்கல் லஞ்சஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், ராஜேஸ்வரி மற்றும் போலீசார் மாறுவேடத்தில் பதுங்கி இருந்தனர். அவர்கள் ராமச்சந்திரனிடம், கிருஷ்ணன் ரூ.6ஆயிரத்தை லஞ்சமாக வாங்கும்போது கையும்,களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்