எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயம்

எசனையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அக்காள்-தங்கை படுகாயமடைந்தனர்.

Update: 2019-09-21 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் கீழக்கரை கடைவீதியை சேர்ந்தவர் மாச்சாப்பு. இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது 65). மாச்சாப்பு ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் பாப்பாத்தி, தனது சகோதரிகளான வள்ளியம்மை(60) மாரியாயி(58) ஆகியோருடன் தனது வீட்டில் வசித்து வருகிறார். சகோதரிகள் 3 பேரும் சலவை தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் வசித்த வீடு பழமையான வீடாகும். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அந்த வீடு ஈரப்பதத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை மாரியாயி வீட்டின் அருகே துணிகளை துவைத்து கொண்டிருந்தார். துவைத்த துணிகளை பாப்பாத்தியும், வள்ளியம்மையும் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு கொடிகளில் காயப்போட்டுக் கொண்டிருந்தனர்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

அப்போது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து, அப்படியே வீட்டிற்குள் விழுந்தது. இதில் பாப்பாத்தியும், வள்ளியம்மையும் கீழே விழுந்து கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயமடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாரியாயி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் படுகாயமடைந்த பாப்பாத்தி, வள்ளியம்மை ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்