சிறுபாக்கத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சிறுபாக்கத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் வடக்கு தெருவில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் இக்கோவில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் சில்லரை நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் சிதறிக்கிடந்தன.
பின்னர் இதுபற்றி சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நள்ளிரவில் கோவில் முன்பு ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் கோவில் முன்பக்க கதவை உடைத்துள்ளனர். பின்னர் கோவிலுக்குள் சென்று உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. ஆனால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்று தெரியவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.