கலந்தாய்வு-கல்லூரி சேர்க்கையிலும் ஆள்மாறாட்ட நபரே பங்கேற்பு: மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வு எழுத மும்பை செல்லவில்லை - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட் டம் செய்த சம்பவத்தில் மாணவர் உதித்சூர்யா தேர்வு எழுதுவதற்கு மும்பைக்கு செல்லவில்லை. அத்துடன் கலந்தாய்வு மற்றும் கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போதும் ஆள்மாறாட்ட நபரே பங்கேற்றதாகவும் போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-09-21 23:00 GMT
தேனி, 

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றதாக கூறி தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். பின்னர் 1½ மாதங்கள் கல்லூரியில் நடந்த வகுப்புகளில் அவர் பங்கேற்ற நிலையில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.

அதன்பேரில் கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர். இதற்கிடையே தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதாவது, ‘நீட்’ தேர்வுக்கு மாணவன் உதித்சூர்யா பெயரில் அவருடைய கல்விச்சான்றுகளை ஆள்மாறாட்ட நபரின் புகைப்படத்தை வைத்து விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, ஆள்மாறாட்ட நபரின் புகைப்படத்துடன் ஹால்டிக்கெட் கிடைத்துள்ளது. அதை வைத்து அந்த நபர் மும்பையில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து கலந்தாய்வுக்கு உதித்சூர்யா அழைக்கப்பட்டார். கலந்தாய்வில் ஹால்டிக்கெட் மற்றும் சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும். இதனால், உதித்சூர்யாவுக்கு பதில் ஆள்மாறாட்ட நபரே கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார்.

கலந்தாய்வில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்துள்ளார். அதன்படி தேனியில் நடந்த மாணவர் சேர்க்கையின் போதும் ஆள்மாறாட்ட நபரே கலந்துகொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். அப்போது உதித்சூர்யாவும், அவருடைய தந்தை வெங்கடேசனும் உடன் வந்ததாக கூறப்படுகிறது. மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கும் நாளில் உதித்சூர்யா யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில், வகுப்பில் பங்கேற்றுள்ளார்.

மாணவர் சேர்க்கையின் போது, மாணவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்தை கொடுக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கேட்டுள்ளது. அப்போது, ஆள்மாறாட்ட நபர் தனது 2 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்களை கொடுத்துள்ளார். அவை, கல்லூரி அலுவலக அறையில் மாணவனின் சான்றிதழோடு வைக்கப்பட்டிருந்தது. அவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மாணவர் உதித்சூர்யா மும்பையில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதியதாக கூறிய நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், ‘நீட்’ தேர்வு நடந்த நாளில் அவர் மும்பைக்கு செல்லவில்லை என்றும், அன்றைய தினம் அவர் சென்னையில் தான் இருந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் அடிக்கடி மும்பை சென்று வந்ததும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

ஒருபுறம் பூதாகரமாக தகவல்கள் வெளியாகும் நிலையில், மற்றொரு புறம் பல்வேறு கேள்விகளும் எழுகிறது. அதாவது, சில ஆண்டுகளாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி மாற்றுச்சான்றிதழிலும் மாணவ, மாணவிகள் புகைப்படம் இடம்பெறுகிறது.

அப்படி இருக்கையில், கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியின் போது மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழில் உள்ள புகைப்படத்திலும், கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கையில் பங்கேற்றவரின் உருவத்திலும் உள்ள வேறுபாட்டை கண்டுபிடிக்காமல் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்தார்களா? அல்லது கலந்தாய்வு நடத்திய அதிகாரிகளுக்கும், இந்த ஆள்மாறாட்டத்துக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மும்பையில் உதித்சூர்யா பயிற்சி பெற்றதாக கூறப்படும் பயிற்சி மையம் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது. போலீசார் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்