கன்னியாகுமரியில் பெண் படுகொலை: போலீசில் புகார் கொடுக்க போவதாக கூறியதால் கொன்றேன் கைதான கணவர் வாக்குமூலம்

கன்னியாகுமரியில் கல்லால் அடித்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குடி போதையில் தகராறு செய்வதை போலீசில் புகார் கொடுக்க போவதாக கூறியதால் கொன்றதாக கைதான அவரது கணவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Update: 2019-09-22 23:15 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி, சிலுவைநகர் பகுதியை சேர்ந்தவர் மரிய டெல்லஸ் (வயது 42), பாசி மாலை வியாபாரி. இவருடைய மனைவி அருள் சுனிதா (37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மரிய டெல்லசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் அதிக மது போதையில் வீட்டுக்கு வந்த அவர் மனைவியிடம் தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் மனைவி அருள் சுனிதாவை கல்லால் தாக்கி படு கொலை செய்தார்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மரிய டெல்லசை கைது செய்தனர்.

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–

நானும், மனைவியும் கன்னியாகுமரி கடற்கரையில் பாசிமாலை விற்பனை செய்து வந்தோம். எனக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை வீட்டில் செலவுக்கு கொடுக்காமல் மது குடித்து வந்தேன். இதனை மனைவி அருள் சுனிதா கண்டித்து வந்தார். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மது போதையில் மனைவியை சரமாரியாக தாக்கினேன். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன். பின்னர், வெளியே வந்த பின்பும் என்னால் மது பழக்கத்தை கைவிட முடியவில்லை.

சம்பவத்தன்று அதிக மது போதையில் வீட்டுக்கு சென்ற போது, அருள் சுனிதா செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்தார். உடனே, அவரிடம் தகராறு செய்து சரமாரியாக அடிக்க தொடங்கினேன். வலி தாங்க முடியாமல் அவர் போலீசில் புகார் கொடுக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடினார். இதனால், ஆத்திரமடைந்த நான் அவரை துரத்தி சென்று வீட்டின் அருகே உள்ள ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டேன். பின்னர், கல்லால் தாக்கி கொன்றேன். தொடர்ந்து, அவர் பள்ளத்தில் விழுந்து இறந்ததாக நாடகமாட நினைத்தேன். ஆனால், போலீசார் என்னை கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மரிய டெல்லஸ், நாகர்கோவிலில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்