கீரமங்கலம், வடகாடு பகுதியில் குளிர்பதன கிடங்கு இல்லாததால் குப்பையில் கொட்டப்படும் பூக்கள்

கீரமங்கலம், வடகாடு பகுதிகளில் குளிர்பதன கிடங்கு இல்லாததால் பூக்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன. ஒரு கிலோ ரூ.5-க்கு விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனைப் படுகின்றனர்.

Update: 2019-09-22 22:30 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், குளமங்கலம், செரியலூர், நெய்வத்தளி, மேற்பனைக்காடு உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் பிரதான விவசாயம் பூக்கள் சாகுபடி ஆகும். இப்பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 10 டன் பூக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மல்லிகை, கனகாம்பரம், முல்லை, ரோஜா, அரளி, சம்பங்கி, பிச்சி, கோழிக்கொண்டை, செண்டி உள்ளிட்ட பூக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்பகுதியில் விளையும் மலர்கள் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு ஆகிய ஊர்களில் உள்ள மலர் கமிஷன் கடைகளின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

மலர்களை வாங்கி செல்ல புதுக்கோட்டை மட்டுமின்றி சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள். பஸ்கள், லாரிகள் மூலமும் பூக்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக செண்டிப் பூ கிலோ ரூ.5 முதல் 7 வரையும், சம்பங்கி கிலோ ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பூக்களின் தேவை குறைவாக இருப்பதால் வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்வதில்லை. அதனால் ஒரு நாளைக்கு சுமார் ஒரு டன் அளவிற்கு பூக்கள் குப்பைக்கு போகிறது. இதனால் விவசாயிகளுக்கும், கமிஷன் கடைக்காரர்களுக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது.

ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை

இதுகுறித்து பூக்கள் உற்பத்தியாளர்கள், கமிஷன் கடைக்காரர்கள் கூறுகையில், இப்பகுதியில் ஒவ்வொரு நாளும் சுமார் 10 டன் அளவிற்கு உற்பத்தி ஆகும் பூக்களை கமிஷன் கடைக்காரர்கள் விற்பனை செய்ய வேண்டும். மல்லிகை, முல்லை பூக்கள் வரத்து குறைவாக இருப்பதால் அந்த பூக்கள் மட்டும் தேங்காமல் விற்பனை ஆகிறது. ஆனால் மாலைகள் கட்டப் பயன்படும் சம்பங்கி, செண்டி, கோழிக்கொண்டை, பச்சை உள்ளிட்ட பூக்கள் ரூ.5-க்கு குறைவாகவே விற்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் பூக்கள் உற்பத்தியாளர்களுக்கு பூக்கள் பறிக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகவில்லை. இதனால் கீரமங்கலத்தை மையமாக வைத்து குளிர்பதன கிடங்கு அமைத்து தரக்கோரி பல வருடங்களாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. குளிர்பதன சேமிப்பு கிடங்கு இருந்தால் விலை குறையும் காலங்களில் பூக்களை சேமித்து வைத்து விலை ஏறும் காலங்களில் விற்பனை செய்யலாம். எனவே இப்பகுதியில் குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைப்பதுடன், பூக்களில் இருந்து நறுமண பொருட்கள் தயாரிக்கும் ஆலை அமைத்தால் மலர் விவசாயிகளை காப்பாற்றலாம் என்றனர்.

மேலும் செய்திகள்