மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு, தறிகெட்டு ஓடிய கார் சலூன் கடைக்குள் புகுந்தது; 3 பேர் படுகாயம்

மூங்கில்துறைப்பட்டு அருகே தறிகெட்டு ஓடிய கார் சலூன் கடைக்குள் புகுந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-22 22:15 GMT
மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே பொறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 41). இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் கடையை திறந்து வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டி கொண்டிருந்தார். இந்த நிலையில் மூங்கில்துறைப்பட்டில் இருந்து திருவரங்கம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் பொறுவள்ளூர் கிராம பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதோடு, அன்பழகனின் கடையை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது.

இந்த விபத்தில் கடையில் இருந்த அன்பழகன் மற்றும் வாடிக்கையாளரான அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (42), அவரது மகன் சிவா (10) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவரை வலை வீசி தேடிவருகின்றார்.

இதனிடையே கார் மோதியதில் மின்கம்பம் பலத்த சேதமடைந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மின்கம்பத்தை சீரமைத்து மீண்டும் மின்வினியோகம் செய்தனர். இருப்பினும் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்