கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-09-22 22:30 GMT
உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் போக விவசாயத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து நெல் நாற்று வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் முன்னதாகவே ஆற்றின் அருகே உள்ள வயல்களில் ஊற்று நீரை பயன்படுத்தி நெல் நாற்று வளர்க்கப்பட்டு நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் ஆழ்துளை கிணறு மூலம் நெல் சாகுபடி செய்தவர்களின் நிலத்தில் பயிர்கள் நன்கு வளர்ந்து வருகிறது.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிகளில் போலியான உரங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அது போன்ற போலியான உரங்கள் எவரேனும் விற்பனை செய்கிறார்களா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

தற்போது விவசாயப்பணிக்காக அரசு உரிமம் பெற்ற அனைத்து உரக்கடைகளிலும் போதுமான அளவு உரங்கள் இருப்பு உள்ளது. எனவே விவசாயிகள் உரம் வாங்கும் போது கண்டிப்பாக உரம் வாங்கியதற்கான விலையுடன் ரசீது பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்காகதான் அனைத்து கடைகளிலும் உரம் வாங்கும் விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் ரசீது வழங்கப்படுகிறது. உரக்கடைகளில் ரசீது இல்லாமல் உரம் வழங்குவது, உரத்தை வைத்து கொண்டு தட்டுப்பாடு என்று கூறி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்படு கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் உரக்கடைகளில் உரம் விற்பனை குறித்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எவரேனும் உரங்கள் குறைந்த விலைக்கு விற்பனைக்கு உள்ளது வாங்கிகொள்ளுங்கள் என்று விவசாயிகளிடம் கூறினால், அந்த உரங்களை விவசாயிகள் யாரும் வாங்கவேண்டாம். இதுகுறித்து கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வேளாண்மைத்துறையின் அலுவலகங்களில் விவசாயிகள் உடனடியாக புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்