குண்டடம் அருகே கல்லூரி பஸ்- அரசு பஸ் மோதல்; மாணவிகள் உள்பட 26 பேர் படுகாயம்

குண்டடம் அருகே கல்லூரி பஸ்-அரசு பஸ் பக்கவாட்டில் மோதி கொண்டன. இந்த விபத்தில் மாணவிகள் உள்பட 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-09-23 22:30 GMT
குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து நேற்று காலை மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ் ஒன்று ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தது. குண்டடத்தை அடுத்த நால்ரோடு அருகே சென்ற போது திருப்பூரில் இருந்து கம்பத்தை நோக்கி சென்ற அரசு பஸ்சும், கல்லூரி பஸ்சும் பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக மோதி கொண்டன.

திடீரென்று பஸ்கள் மோதி கொண்டதால் அதில் பயணம் செய்த பயணிகள் அலறினார்கள். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருபஸ்களும் பக்கவாட்டில் மோதி கொண்டதால் ஜன்னலோரம் பயணம் செய்த பயணிகள் காயம் அடைந்தனர். இதில் கல்லூரி பஸ்சில் பயணம் செய்த 20 மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் கிருத்திகா(18) சூரிய பிரியா (19) ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.அதேபோல் அரசு பஸ்சில் பயணம் செய்த நட்ராஜ் ,கனிமொழி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்