பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை கண்டித்து கூடலூரில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை கண்டித்து கூடலூரில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-23 22:30 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக ஓவேலி பேரூராட்சி முழுவதும் அலைவரிசை சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர இணையதள வசதியும் பெற முடியாத நிலை உள்ளது. பி.எஸ்.என்.எல். சேவையை முழுமையாக வழங்க கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தை கண்டித்து கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட அனைத்து கட்சியினர் நேற்று மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜ், காங்கிரஸ் அப்துப்பா, அம்சா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், ஓவேலி பகுதி மக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் மற்றும் மத்திய அரசை கண்டித்து கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவையை முறையாக வழங்க வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் போலீசார் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அனுமதி வழங்க வில்லை. இதற்கு பதிலாக அரை மணி நேரம் மட்டும் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினர்.

இதுகுறித்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கூறும்போது, பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவை பொதுமக்களுக்கு சரிவர கிடைப்பது இல்லை. மத்திய அரசு பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஓவேலி பேரூராட்சியில் அலைவரிசை சேவை முழுமையாக முடங்கி கிடக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் தீவிரமாகும் என்றனர். 

மேலும் செய்திகள்