தேனி அருகே, பாதை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள், அரசியல் கட்சியினர் முற்றுகை

தேனி அருகே பாதை வசதி கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நேற்று 8-வது நாளாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.;

Update:2019-09-24 03:45 IST
தேனி,

தேனி அருகே சுக்குவாடன்பட்டி இந்திரா காலனியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு பாதை வசதி கேட்டு கடந்த 16-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்கள் தனியாருக்கு சொந்தமான இடத்தை பாதையாக பயன்படுத்தி வந்தனர். அந்த இடத்தின் உரிமையாளர் கோர்ட்டு உத்தரவு பெற்று தனது இடத்தை சுற்றிச் சுவர் எழுப்பியுள்ளார். இதனால், பாதை வசதி கேட்டு 5 நாட்களாக அந்த பகுதி மக்கள் ரத்தினம் நகரில் உள்ள ஒரு புளியந்தோப்பில் குடியேறி போராட்டம் நடத்தினர்.

பின்னர் 2 நாட்களாக பெரியகுளம் சாலையில் போராட்டம் நடத்தினர். 8-வது நாளாக நேற்றும் மக்களின் போராட்டம் நீடித்தது. நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இந்திரா காலனி மக்கள் வந்தனர். அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களும் வந்தனர்.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். இதில் தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை.திருவள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பாவரசு, தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், நாம் தமிழர் கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து சப்-கலெக்டர் ராஜா தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சார்பில் பிரதிநிதிகள் சிலர் கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது கலெக்டர், அந்த பகுதிக்கு மாற்றுப் பாதை அமைக்கப்பட்டு வருவது குறித்து தெரிவித்தார்.

ஆனால், அவர்கள் இந்திரா காலனி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய போது இருந்த பாதையை மீட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது இவ்வளவு ஆண்டாக பயன்படுத்திய தனியாருக்கு சொந்தமான பாதையை ஆதிதிராவிடர் நலத்துறையின் நிதியில் இருந்து விலைக்கு வாங்கி, மக்களுக்கு சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தையொட்டி பாதுகாப்புக்காக அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்