காரைக்குடியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும்; தொழில் வணிக கழகம் வலியுறுத்தல்

காரைக்குடியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தொழில் வணிக கழகம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-09-23 22:45 GMT
காரைக்குடி,

காரைக்குடி தொழில் வணிக கழகத்தின் வருடாந்திர பேரவை கூட்டம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் அதன் தலைவர் சாமி திராவிடமணி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் காசிவிசுவநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். கூட்டத்தில் துணைத்தலைவர்கள் ராகவன் செட்டியார், பெரிய தம்பி, இணை செயலாளர்கள் கந்தசாமி, சையது முகமது, நாச்சியப்பன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- 1982-ம் ஆண்டு முதல் காரைக்குடியை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தற்போது சிவகங்கை மாவட்டத்தில் 9 தாலுகாக்கள், 11 ஒன்றியங்கள், 3 நகராட்சிகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டம் அவசியமாகிறது. தொழில் வணிகம், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு நகர்கள், சிறு குறு தொழில்கள், அரசுத் துறை தலைமை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மக்கள் தொகை மற்றும் அரசு வருவாய் ஆகியவற்றில் முதலிடம் பெற்று விளங்கும் காரைக்குடியை புதிய மாவட்டதின் தலைநகராக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை குழுவாக சென்று சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

தேவகோட்டை சப்-கோர்ட்டில் இருக்கும் 90 சதவீத சிவில் வழக்குகள் காரைக்குடி பகுதியை சார்ந்தவை. எனவே காரைக்குடி நீதிமன்ற வளாகத்திலேயே புதிய சப்-கோர்ட்டு அமைக்க வேண்டும். இதனால் கால விரயம், செலவு, வீண் அலைச்சல் போன்றவைகளை தவிர்க்க உதவியாக இருக்கும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்