அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை

அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-09-23 22:15 GMT
நாகப்பட்டினம்,

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை என தவறான அவப்பெயர் சமுதாயத்தில் சிலரால் உள்நோக்கத்துடன் பரப்பப்படுகிறது. ஆசிரியர்களை கண்காணிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி அலுவலர்கள் இருக்கும் போது ஆசிரியர்கள் பள்ளிக்கு எப்படி கால தாமதமாக வர முடியும்? இந்த பழியை போக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் வருகைப்பதிவை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நாகை வட்டாரக்கிளை வரவேற்கிறது.

இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் நடப்பாண்டு முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. அடுத்தமாதம் (அக்டோபர்) 3–ந்தேதி முதல் மாவட்டத்தில் உள்ள 240 நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதில் 240 பள்ளிகளில் 180 நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவி பொருத்துவதற்கு இந்த கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மடிக்கணினிகள் வழங்கப்பட்டு விட்டன. தற்போது அந்த பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

மீதமுள்ள 60 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. எனவே அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் மடிக்கணினி வழங்க நாகை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்