சொத்து பிரச்சினையில் பெண் கொடூர கொலை: தம்பதிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சொத்து பிரச்சினையில் பெண்ணை கொடூரமாக கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2019-09-25 22:30 GMT
தேனி,

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள ஆத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். விவசாயி. இவருடைய மனைவி அனுமத்தியம்மாள் (வயது 40). ராஜாங்கத்தின் தம்பி சோலைமலை (51) அதே பகுதியில் வசித்து வருகிறார்.

ராஜாங்கத்துக்கும், இவருடைய தம்பி குடும்பத்துக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி ஏற்பட்ட தகராறில் அனுமத்தியம்மாளை சோலைமலையும், அவருடைய மனைவி செல்வக்கனியும் (39) சேர்ந்து தாக்கினர்.

பின்னர் அவர்கள் அனுமத்தியம்மாளின் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்தனர். எரியும் தீயுடன் அவர் தண்ணீர் தொட்டிக்குள் குதித்தார். அப்போதும் அவர்கள் ஆத்திரம் தீரவில்லை. தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து அனுமத்தியம்மாளை கொலை செய்தனர். அதன்பிறகு அவருடைய உடலை தூக்கில் தொங்கவிட்டு, தற்கொலை செய்தது போல் நாடகம் ஆடினர்.

இதுகுறித்து அனுமத்தியம்மாளின் தம்பி கர்ணன் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சோலைமலை, அவருடைய மனைவி செல்வக்கனி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கீதா நேற்று தீர்ப்பு கூறினார்.

கொலை செய்த வழக்கில் சோலைமலை, செல்வக்கனி இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

அத்துடன் கொலைக்கான தடயங்களை மறைக்க முயற்சித்த குற்றத்துக்கு இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்