தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை வைத்து பிடித்த 3 டன் மீன்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை வைத்து பிடித்த 3 டன் மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-09-28 23:00 GMT
நாகப்பட்டினம்,

தமிழக அரசு சுருக்குமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க கூடாது என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நாகைக்கு உட்பட்ட சில பகுதிகளில் மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்து விற்பனை செய்வதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையிலான அதிகாரிகள் சீர்காழி அருகே சந்திரபாடி, நாகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

3 டன் மீன்கள் பறிமுதல்

நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடத்திய சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்தி பிடித்து வரப்பட்ட மீன்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 1 டன் மத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் பொது ஏலம் விடப்பட்டது.

இதேபோல் சந்திரபாடியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்தி பிடித்து வரப்பட்ட 2 டன் மீன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர் கூறியதாவது:-

அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்படும் மீன்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன்பிடி துறைமுகங்களிலும் மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விசைப்படகுகளில் இருந்து சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி பிடித்த மீன்களை, கரைக்கு கொண்டுவந்தால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவார்கள் என்று சிலர் பைபர் படகுகளில் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

நடவடிக்கை

இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து அவர்கள் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர். நாகை, சந்திரபாடியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி பிடித்த மீன்களை பறிமுதல் செய்துள்ளோம். அதனை ரூ.79 ஆயிரத்துக்கு பொதுஏலத்தில் விற்பனை செய்துள்ளோம். சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது கண்டறியப்பட்டால் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். எனவே அரசின் தடையை மீறி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்