லாலாபேட்டையில் கார்-அரசு பஸ் மோதல்: என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி

லாலாபேட்டையில் காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.;

Update:2019-09-29 04:30 IST
லாலாபேட்டை,

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 46). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். கரூர் மாவட்டம், புகளூரை சேர்ந்தவர் சசிக்குமார் (26). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து வேலை தேடி கொண்டிருந்தார். சசிக்குமார், ஆனந்தின் அண்ணன் மகன் ஆவார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 பேரும் ஒரு காரில் புகளூரில் இருந்து திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை சசிக்குமார் ஓட்டி வந்தார்.

லாலாபேட்டை மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே திருச்சியில் இருந்து கரூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை டிரைவர் சண்முகம் (46) என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் மேம்பாலத்தில் வந்தபோது காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது.

2 பேர் பலி

இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி சசிக்குமார், ஆனந்த் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த 2 பேரையும், பொதுமக்களின் உதவியுடன் மீட்டு ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிக்குமார் பரிதாபமாக இறந்தார்.

ஆனந்த் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த்தும் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்