வங்கிகள் வழங்கும் கடனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் - வானதி சீனிவாசன் பேட்டி

வங்கிகள் வழங்கும் கடனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுபா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

Update: 2019-09-29 23:15 GMT
உடுமலை,

பா.ஜனதா கட்சி சார்பில் ஒரேநாடு ஒரே சட்டம் தேச ஒற்றுமை பிரசார இயக்க சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் உடுமலை-தளி சாலையில் எலையமுத்தூர் பிரிவில் உள்ள திருமண மண்டபத்தில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பா. ஜனதா கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு வானதி சீனிவாசன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யபட்டதற்கான காரணத்தை பொதுமக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் மாவட்டம் தோறும் இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தேச ஒற்றுமையில் நம்பிக்கை வைத்துள்ளவர்களிடம் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற 3-ந்தேதியில் இருந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேசிய வங்கிகளில் மக்கள் தங்களது தேவைக்கு ஏற்ப கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறு, சிறு வாகனங்களுக்கு, தொழில்களுக்கு, தொழில் செய்கிறவர்கள் கூடுதல் மூலதனம் செய்வதற்கு என்று எந்த தேவைக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதை மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்வாயிலாக பணப்புழக்கத்தை நம்மால் அதிகரிக்கமுடியும்.

மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேலை வாய்ப்பு, புதிய தொழில்கள் உருவாதல் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி நாம் நடைபோட வேண்டும். இப்போது நம்முடைய தேவை என்பது நம்மிடம் இருக்க வேண்டிய நம்பிக்கை. உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்புகளை எல்லாம் சொல்கிறார்கள்.

ஆனால் இந்தியா அதிலிருந்து தன்னை தற்காத்துக் கொண்டு ஒரு நம்பிக்கையுடன் செயல்பட வேண்டுமென்றால் மத்திய அரசின் திட்டங்களை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறோம். மேற்கண்டவாறு வானதி சீனிவாசன் கூறினார்.

மேலும் செய்திகள்