திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் அனுமதி

திருச்சி அரசு மருத்துவ மனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-09-29 22:15 GMT
திருச்சி,

மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு காரணமாக ஆங்காங்கே மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிக்காக திருச்சி மாநகராட்சி சார்பில் 360 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

டெங்கு காய்ச்சல் அறிகுறி

இதற்கிடையே ஏற்கனவே குழந்தைகள் வார்டு செயல்பட்டு வந்த இடத்தில் புதிதாக காய்ச்சலுக்கான வார்டு தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். நேற்று முன்தினம் ஒரேநாளில் 104 பேர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை டீன்(பொறுப்பு) அர்சியா பேகம் கூறுகையில், “காய்ச்சலால் வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் புதிதாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இருந்து டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர காய்ச்சலால் வருபவர்களுக்கு டெங்கு அறிகுறி உள்ளதா? என பரிசோதனை செய்து வருகிறோம். அவ்வாறு டெங்கு பாதிப்பு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்றனர். 

மேலும் செய்திகள்