கோவில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்

புதுவையில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Update: 2019-09-29 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை காந்தி வீதியில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பிரதோஷம் மற்றும் சிறப்பு பூஜை நாட்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 26-ந் தேதி மாலை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் வாங்கி சாப்பிட்டனர்.

இதன்பின் வீடு திரும்பிய அவர்களுக்கு திடீரென வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. இதில் குமார் (வயது 45) குமாரி(45), அய்யப்பன்(55), சத்யவாணி(66), வெங்கடேசன்(30), செல்வி (45), கந்தசாமி(50) உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதேபோல் ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 50-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 30 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோவில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்