பேரணாம்பட்டில் ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த போலி நிருபர் கைது
பேரணாம்பட்டில் ஆட்டோ டிரைவரை தாக்கி பணம் பறித்த போலி நிருபரை போலீசார் கைது செய்தனர்.;
பேரணாம்பட்டு,
பேரணாம்பட்டு டவுன் தரைக்காட்டை சேர்ந்தவர் ஹிப்சூர்ரஹ்மான் (வயது 35). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் அவர் திருந்தி ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று தனது வீட்டில் நண்பர்களுடன் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 பேர் வந்தனர். அவர்களில் வேலூரை சேர்ந்த பாலாஜி என்பவர் ஹிப்சூர்ரஹ்மானிடம் தான் டி.வி.நிருபர் என கூறி அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் பாலாஜி அவரிடம் நீ லாட்டரி தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. எனவே எங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
அதற்கு ஹிப்சூர்ரஹ்மான் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதையடுத்து பாலாஜி, அவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்ததாக கூறப்படுகிறது. இதை அவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி கத்தியால் அவரை வெட்டித்தாக்கியதாக தெரிகிறது.
மேலும் பாலாஜி மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். பொதுமக்கள் அவர்களில் பாலாஜியை மட்டும் பிடித்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். பின்னர் பொதுமக்கள் அவரை பேரணாம்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது பணியில் இருந்த பெண் போலீஸ் ரமாபாயிடம், பாலாஜி லாட்டரி, சாராயம் விற்பவர்களை காசு வாங்கிக்கொண்டு விட்டு விடுகிறீர்களா? என கூறி, மேலும் இன்ஸ்பெக்டர் குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு அவரையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் குமார் நடத்திய விசாரணையில் பாலாஜி போலி நிருபர் என தெரியவந்தது. இதையடுத்து ஹிப்சூர்ரஹ்மான் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த 3 பேரை தேடி வருகின்றனர்.