பட்டாசு ஆலை உரிமையாளருக்கு பதிலாக சென்று பலியான ஊழியர்; உருக்கமான தகவல்கள்

பட்டாசு வேனில் ஆலை உரிமையாளருக்கு பதிலாக சென்ற ஊழியர் விபத்தில் சிக்கி பலியான உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.

Update: 2019-09-30 23:15 GMT
அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சாய்பாபா (வயது53). பட்டாசு தொழிற்சாலை ஊழியர். அவருடைய மனைவி வேதவல்லி (45). இவர்களுக்கு சத்யா (21), பிரதீபா (18) என்ற மகள்களும், ஆனந்த் (19) என்ற மகனும் உள்ளனர். இவர்களில் சத்யாவுக்கு வருகிற தை மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

கடந்த சில தினங்களாக சாய்பாபாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இவர் பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் வீராசாமியின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முருங்கப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. பட்டாசு கொண்டு செல்லும்போது உரிமையாளர் வீராசாமி தான் உடன் செல்வது வழக்கம்.

ஆனால் நேற்று முன்தினம் அவரால் செல்ல முடியாததால் தனக்கு பதிலாக பட்டாசு வேனில் சென்று வருமாறு சாய்பாபாவிடம் வீடு தேடிச் சென்று பட்டாசு உரிமையாளர் வீராசாமி வலியுறுத்தியுள்ளார். அதற்கு சாய்பாபா தனது உடல்நிலையை காரணம் காட்டி பட்டாசு வேனில் சென்று வர முதலில் மறுத்து விட்டதாக தெரிகிறது.

உரிமையாளர் வீராசாமி தொடர்ந்து வலியுறுத்தவே வேறுவழியின்றி அந்த வேனில் சென்றுள்ளார். அப்போது தான் வேன் வெடித்த விபத்தில் சிக்கி உடல் சிதறி சாய்பாபா இறந்துள்ளார்.

வருகிற தை மாதம் சாய்பாபாபாவின் மூத்த மகள் சத்யாவுக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

வழக்கமாக சென்று வரும் பட்டாசு ஆலை உரிமையாளருக்கு பதிலாக சென்ற போது பட்டாசு வேன் வெடித்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்