வேலூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி - போலீசார் விசாரணை

வேலூரில் அரசு டவுன் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலியானான்.

Update: 2019-10-02 23:00 GMT
வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி 2-வது பகுதியை சேர்ந்தவர் இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாவட்ட துணை செயலாளர். இவருடைய மகன் சிந்தனைசெல்வன் (வயது 14). வேலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் சிந்தனைசெல்வன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அவனுடைய அண்ணன் பாலாஜிக்கு மதிய உணவு கொடுக்க சென்றான்.

பின்னர் மாலை 4 மணியளவில் அவன் மொபட்டில் வேலூர்-ஆற்காடு சாலை வழியாக வீடு நோக்கி சென்று கொண்டிருந்தான். அதேசமயம் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆற்காடு நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்றும் சென்று கொண்டிருந்தது.

சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே சென்ற டவுன் பஸ்சை சிந்தனைசெல்வன் முந்திச்செல்ல முயன்றதாகவும், அதேநேரத்தில் எதிரே ஒரு வாகனம் வந்ததால் திடீரென நிலை தடுமாறிய அவன் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சிந்தனைசெல்வனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அரசு டவுன் பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சத்துவாச்சாரி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்