தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

Update: 2019-10-03 23:00 GMT
பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளை தலைவருமான குமார் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தலைவர் அந்தோணிராஜா, ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் தலைவர் கோவிந்தன், ஏ.ஏ.எல்.எல்.எப். தொழிற்சங்கத்தின் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு உடனடியாக தொடங்க வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும். ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.

தீபாவளி போனஸ்

1-4-2003-க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆர்.டி.,ஆ.சி. முறையை ஒழித்திட வேண்டும். ஓய்வு பெறும் அன்றே அனைத்து பணப்பயன்களையும் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும். தீபாவளி முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்