ஆண்டிப்பட்டி அருகே, கனிம வளத்துறை ஊழியருக்கு அடி-உதை - மணல் அள்ளும் கும்பல் வெறிச்செயல்
ஆண்டிப்பட்டி அருகே, கனிமவளத்துறை ஊழியரை அடித்து உதைத்த மணல் அள்ளும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.;
கண்டமனூர்,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மறவபட்டி ஓடையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல், லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர் கண்ணன் மற்றும் கணினி உதவியாளர் மதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கனிம வளத்துறையினர் வருவதை பார்த்ததும் மணல் அள்ளி கொண்டிருந்த கும்பல் தப்பியோடி விட்டனர். டிரைவரை மட்டும் மடக்கி பிடித்தனர். இதையடுத்து லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த லாரியை, ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வருமாறு டிரைவரிடம் அதிகாரிகள் கூறினர்.
இதைத்தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் ஒரு காரில் தாலுகா அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். காருக்கு பின்னால் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை தொடர்ந்து மற்றொரு காரில், கணினி உதவியாளர் வந்தார். கனிமவள அதிகாரி சென்ற கார் வேகமாக முன்னே சென்று விட்டது.
இந்தநிலையில் ஆண்டிப்பட்டியை அடுத்த குப்பாம்பட்டி விலக்கு அருகே வரும் போது, 10 பேர் கொண்ட கும்பல் கணினி உதவியாளர் வந்த காரை மறித்தது. பின்னர் காருக்குள் இருந்த அவரை சரமாரியாக, தாக்கியது. அதன்பின்பு பறிமுதல் செய்யப்பட்ட லாரியை எடுத்துக்கொண்டு மர்ம கும்பல் தப்பி சென்றது.
இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட லாரி வெகுநேரமாகியும் வராததால், கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர் கண்ணன் ராஜதானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராஜதானி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது குப்பாம்பட்டி விலக்கில் படுகாயங்களுடன் கணினி உதவியாளர் மதி காருக்குள் மயங்கி கிடந்தார்.
இதனையடுத்து போலீசார் அவரை மீட்டு மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 10 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.