லாரியில் கொண்டு வந்த 9 ஏலக்காய் மூட்டைகள் திருட்டு
கேரளாவில் இருந்து போடிக்கு லாரியில் கொண்டு வந்த 9 ஏலக்காய் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.;
போடி,
கேரள மாநிலம் இடுக்கி அருகே சக்குபள்ளம் என்னுமிடத்தில் ஏலக்காய் விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு இருந்து 152 ஏலக்காய் மூட்டைகள் லாரி மூலம் போடி திருமலாபுரத்தில் உள்ள தனியார் ஏலக்காய் வியாபார நிறுவனத்துக்கு கடந்த 4-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த லாரியை ஜோசப் வர்க்கீஸ் என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரியில் கேரளாவில் இருந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் நந்தக்குமார், சிவா, மணிமுத்து ஆகிய 3 பேர் கம்பம் வரை வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இறங்கி கொண்டனர்.
அந்த லாரி தேவாரம், நாகலாபுரம் வழியாக போடி திருமலாபுரத்துக்கு 4-ந்தேதி நள்ளிரவு வந்து சேர்ந்தது. இரவு 1.30 மணியளவில் போடி திருமலாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏலக்காய் மூட்டைகளை இறக்க லாரியை கொண்டு சென்றனர். அங்கு லாரியில் ஏறி பார்த்தபோது தார்பாய் கிழிந்து இருந்தது. அதிலிருந்த 9 ஏலக்காய் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஏலக்காய் விற்பனை செய்யும் நிறுவன நிர்வாகி தாமஸ் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினார்.
விசாரணையில் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி நாகலாபுரம் விலக்கு அருகே வந்தபோது தார்பாயை கிழித்து ஏலக்காய் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடி சென்று இருக்கலாம். அந்த பகுதியில் சாலையில் ஏலக்காய்கள் சிதறி கிடப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் திருட்டு போன 9 ஏலக்காய் மூட்டைகளின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.