கம்பத்தில் கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது

கம்பத்தில் கல்லூரி மாணவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-09 22:45 GMT
கம்பம்,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா செந்துறையை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 19). இவர் கம்பத்தில் உள்ள அரபிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு பஸ்சில் கம்பம் வந்துள்ளார். பின்னர் அவர் கம்பம்மெட்டு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் உள்ள காய்கறி கடை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் அவரை வழி மறித்துள்ளனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சதாம் உசேனிடம் ரூ.2 ஆயிரத்து 800 மற்றும் 2 சட்டைகளை பறித்து சென்றனர்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் சதாம் உசேன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் போலீசார் கம்பம் முழுவதும் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது புதுப்பள்ளி வாசல் அருகே சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் கம்பம் நேதாஜி நகரை சேர்ந்த மனோஜ்குமார் (19), பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரமே‌‌ஷ் மகன் சஞ்சய்குமார்(20), உலகத்தேவர் தெருவை சேர்ந்த குமார் மகன் சஞ்சய்குமார் (19) என்பதும், சதாம் உசேனிடம் கத்தி காட்டி பணம் மற்றும் சட்டைகளை பறித்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்