மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங் களில் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2019-10-09 22:45 GMT
ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் இருபோக பாசன நிலங்களின் முதல்போகத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்ட போதும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து அணையில் இருந்து, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனையடுத்து நேற்று வைகை அணையில் இருந்து ஒருபோக பாசனத்திற்காக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தார். வைகை அணையின் 7 பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர்கள் குபேந்திரன், ஆனந்தன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று காலை 10 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 61 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,204 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்திற்காகவும், மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,190 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 3,799 மில்லியன் கனஅடியாக இருந்தது.

அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி தாலுகா, மதுரை வடக்கு தாலுகா, மேலூர் தாலுகா, உசிலம்பட்டி தாலுகா, திருமங்கலம் தாலுகா ஆகிய பகுதிகளில் 98 ஆயிரத்து 764 ஏக்கரும், திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை தாலுகாவில் 199 ஏக்கரும், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை தாலுகாக்களில் உள்ள 6 ஆயிரத்து 39 ஏக்கரும் என சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வைகை அணையின் நீர்இருப்பை பொறுத்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. நீர்இருப்பு குறையும் பட்சத்தில் முறைப்பாசனம் அமல்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்