முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-10-11 23:15 GMT
உத்தமபாளையம்,

உத்தமபாளையம் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் மேத்யூ. இவரது மகன் பிரவீன் (வயது 18). இவர் தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து கிளம்பிய பிரவீன் கல்லூரிக்கு செல்லவில்லை. ஆனால் வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, தனது நண்பரான தேவாரம் அய்யப்பன்கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் கதிரவன் (18) என்பவருடன் சேர்ந்து உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றுக்கு வந்தார்.

அங்குள்ள தடுப்பணை பகுதியில் இறங்கி பிரவீன் குளித்தார். கதிரவன் கரையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென்று தண்ணீரில் பிரவீன் இழுத்து ஆழமான பகுதிக்கு செல்லப்பட்டு நீரில் மூழ்கினார். அதனை பார்த்த கதிரவன் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். ஆனால் அங்கு யாரும் குளிக்காததால் அவரை காப்பாற்ற இயலவில்லை. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் பிரவீனை காணவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர். அவர்கள் தடுப்பணை பகுதி மற்றும் கரையோரங்களில் தேடினர். ஆனால் அங்கு பிரவீன் இல்லை. இதையடுத்து தேனி மாவட்ட உதவி தீயணைப்புத்துறை அதிகாரி மணிகண்டன் தலைமையில் மூன்று பிரிவுகளாக பிரிந்து தீயணைப்பு வீரர்கள் எல்லப்பட்டி, குச்சனூர், வீரபாண்டி ஆகிய இடங்களில் முல்லைப்பெரியாற்றில் உள்ள தடுப்பணை பகுதிகளில் தொடர்ந்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்