புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2019-10-12 21:45 GMT
கம்பம்,

கம்பம் வேணுகோபாலகிரு‌‌ஷ்ணன் கோவிலில், புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி வேணுகோபாலகிரு‌‌ஷ்ணன் உற்சவரை சப்பரத்தில் வைத்து ஆண், பெண் பக்தர்கள் பஜனை பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக செல்வது வழக்கம்.

அதன்படி நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி வேணுகோபால கிரு‌‌ஷ்ணன் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவரை வைத்து ஆண், பெண் பக்தர்கள் பஜனை பாடியபடி ஊர்வலமாக புறப்பட்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்தது.

அதன்பிறகு கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. இதேபோல் கம்பராயப்பெருமாள் கோவில், நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு பால், தேன், நெய் உள்பட 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுரே‌‌ஷ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வரதராஜ பெருமாளுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கருட வாகனத்தில் வேங்கடமுடையான் அலங்காரத்தில் பக்தர்களுக்கு உற்சவர் அருள்பாலித்தார். பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் உலக நன்மை வேண்டி 14 மணி நேரம் ஹரேராம நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. ஸ்ரீ மாதுரி-வரதர் சுவாமிக்கு திருமஞ்சனம் மற்றும் துளசியால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து பலவித அன்னங்களுடன் சுவாமிக்கு திருப்பாவாடை சாற்றுதல் (அன்னக்கூட உற்சவம்) நடந்தது. காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்