மதுரை சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை; கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொன்றவர்

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொன்றவர், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-10-12 23:00 GMT
மதுரை,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கம்மாளப்பட்டி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அலங்காநல்லூர் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அப்பெண் யார்?, அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கிணற்றில் இறந்து கிடந்த பெண், அதே ஊரை சேர்ந்த வெள்ளைப்பிரியன்(வயது 27) என்பவரது மனைவி அபிநயா(23) என்பதும், அவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

அபிநயாவிற்கும், வலசை கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாம். இதனை வெள்ளைப்பிரியன் கண்டித்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெள்ளைப்பிரியன், தனது மனைவி அபிநயாவை சரமாரியாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதையடுத்து மனைவியின் உடலை கிணற்றில் வீசிவிட்டு வெள்ளைப்பிரியன் தப்பியோடியது தெரியவந்தது. பின்னர் கொலை தொடர்பாக வெள்ளைப்பிரியனை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் வெள்ளைப்பிரியனை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். சிறைக்கு வந்த நாள் முதல் வெள்ளைப்பிரியன் மிகவும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். மேலும் மனைவி, குழந்தைகளை நினைத்து அழுதுகொண்டே இருந்தாராம். இதற்கிடையே நேற்று முன் தினம் நள்ளிரவு வெள்ளைப்பிரியன் சிறையில் உள்ள கழிப்பறைக்கு சென்றார்.

அங்கு அவர் அணிந்திருந்த கைலியால் கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கு வந்த சிறை காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வெள்ளைப்பிரியன் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதி தற்கொலை குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்