திருப்பத்தூர் மாவட்ட தனி அலுவலருக்கு தற்காலிக அலுவலகம் வட்ட வழங்கல் அலுவலர் அறை புதுப்பிக்கப்பட்டு ஒதுக்கீடு

திருப்பத்தூர் மாவட்ட தனி அலுவலருக்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர் அறை புதுப்பிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-10-12 21:45 GMT
திருப்பத்தூர், 

வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்பட்டு திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தர்மபுரி உதவி கலெக்டராக பணிபுரிந்து வந்த சிவனருள் திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு அதிகாரியாக தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். அவர் திருப்பத்தூருக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக உருவாக்கப்படும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களை ஒரே வளாகத்தில் அமைக்க இடங்களை தேர்வு செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் தங்கும் விடுதியில் சிறப்பு அதிகாரி சிவனருளின் அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் அவருக்கு திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு தற்காலிக அலுவலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தனி அலுவலர் சிவனருள் தனது அலுவலக பணிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட தற்காலிக கலெக்டர் அலுவலகம் அமைக்க 11 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:-

தற்காலிக மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயன்படுத்தப்படாமல் உள்ள 10 வகுப்பறைகள் மற்றும் காலியாக உள்ள வகுப்பறைகளை தேர்வு செய்துள்ளோம். இந்தப் பள்ளியில் நடுவில் குறுக்கு சுவர் எடுத்து தடுத்து சப்- கலெக்டர் அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள மதில் சுவரை இடித்து கேட் வைத்து அரசு தோட்டம் வழியாக தற்காலிக கலெக்டர் அலுவலகம் செயல்படுத்தப்படும்.

பின்னர் ஜனவரி மாதம் 2020 முதல் புதிய மாவட்டம் செயல்படத் தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்