கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களை தூர்வார வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு குளங்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2019-10-12 22:15 GMT
கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெரியகுளம், அம்மாகுளம், கெங்கன்குளம், கடமான்குளம், செங்குளம் உள்ளிட்ட 5 கண்மாய்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கண்மாய்களில் பெரும்பான்மையான இடங்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இதைக்கருத்தில் கொண்டு பெரியகுளம், அம்மாகுளம் கண்மாய்களில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு குடிமராமத்து பணி நடந்தது. கண்மாய்களின் கரைகளும் பலப்படுத்தப்பட்டன. தற்போது கெங்கன்குளம், கடமான்குளம், செங்குளம் ஆகிய கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது.

குளங்களின் கரைகளை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனால் அந்த குளங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு குளங்களை தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பல்லவி பல்தேவ், 15 நாட்களுக்குள் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் அவர் கூறி ஒரு மாதத்துக்கு மேலாகியும் செங்குளம் உள்ளிட்ட 3 கண்மாய்களில் இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கினால் மூலவைகை ஆறு மற்றும் ஓடைகளில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும். எனவே மழை தொடங்குவதற்கு முன்பு செங்குளம், கெங்கன்குளம், கடமான்குளம் உள்ளிட்ட கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரைகளை சீரமைக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்