நாமக்கல்லில் பரபரப்பு பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை

நாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.30 கோடி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2019-10-12 23:15 GMT
நாமக்கல்,

நாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நிர்வாகத்தால் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாமக்கல், கரூர், சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பள்ளி சார்பில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அது தொடர்பான கணக்குகள் முறையாக சமர்ப்பிக்கப்படுவது இல்லை எனவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நாமக்கல்லில் உள்ள பள்ளி அலுவலகம், நாமக்கல், கரூர், சென்னையில் உள்ள பள்ளி நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் ‘நீட்’ பயிற்சி மையம் உள்ளிட்ட 17 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.

நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் நீடித்தது. இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். குறிப்பாக இப்பள்ளி கணக்குகள் பராமரிக்கப்படும் வங்கிகளுக்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்று வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். இந்த சோதனை நேற்று இரவும் நீடித்தது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக நடைபெற்ற சோதனையில் சுமார் ரூ.150 கோடி வரை வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும், மேலும் பள்ளியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.30 கோடி ரொக்கம் சிக்கி உள்ளதாகவும், தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் டெல்லியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். சோதனை நடைபெற்றதையொட்டி பள்ளி வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்