வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை - கலெக்டர் முன்னிலையில் நடந்தது

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி திண்டுக்கல்லில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் நடத்தப்பட்டது.

Update: 2019-10-13 22:15 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல்லில், சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில், பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் திண்டுக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் இந்த ஒத்திகையை நடத்தினர்.

அப்போது உயரமான கட்டிடங்களில் சிக்கியவர்களை கயிறு மூலம் எவ்வாறு மீட்பது, தீப்பற்றி எரியும் கட்டிடங்களுக்குள் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, சமையல் கியாஸ் சிலிண்டரில் பற்றிய தீயை அணைக்கும் விதம், உடலில் தீப்பற்றி எரியும் ஒருவரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற பல்வேறு மீட்பு நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உ‌ஷா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் சரவணபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரிடர் குறைப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இதில் பள்ளி மாணவ-மாணவிகள், நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள், சாரணர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டு பேரிடர் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

மேலும் செய்திகள்